ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.இப்பசுக்களை அழித்துவிட்டால் விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்’ என்றார்.இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்க முடியாது ..நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன. அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையைவிட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக்கூடங்கள் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்கவிளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, “இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்’ என்றார்.இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக்கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டோம்.நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கான பசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக்கூடங்களுக்கு அனுப்பி வருகிறது.இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.விளைநிலம் குறைந்தால் என்ன? குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப்பொருள்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது வருங்கால சந்ததிகள்தான். அறிவியலார்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.
Thursday, 25 December 2014
Wednesday, 24 December 2014
ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார்
ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை. வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!
ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.
தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.
படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை தானே முன்னின்று நடத்தினார். சேனாபதிகளான மருது சகோதரர் கள், உற்ற துணையாக இருந்து படைகளுக்குத் தலைமை தாங்கினர். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.
இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது! இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்!
சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.
நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் தானே!
Tuesday, 23 December 2014
ரஷ்ய மண்ணில் கம்பீரமாகக் காட்சி அளிக்கப்போகிறார் வள்ளுவர்!
வான்புகழ் வள்ளுவர், ரஷ்ய மண்ணில் கம்பீரமாகக் காட்சி அளிக்கப்போகிறார். இந்திய அரசு, திருவள்ளுவரின் பிறந்த நாளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. இந்த நேரத்தில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், திருவள்ளுவரின் சிலையை நிறுவ, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாம். 'சிலையை வைப்பதற்கான இடத்தைத் தேர்வுசெய்து வருகிறோம். இதன் மூலம் இந்தியாரஷ்யா இடையேயான கலாசாரப் பரிமாற்றம், நட்புறவு மேம்படும்’ என்று இந்தியாவுக்கான ரஷ்யத் துணைத் தூதர், கோட்டோவ் (Kotov) தெரிவித்துள்ளார். வாழ்க வள்ளுவம்!
Monday, 22 December 2014
2,300 ஆண்டுகளுக்கு முன்பே இயங்கிய இரும்புத் தொழிற்சாலைகள்!- கோவை இடையர்பாளையத்தில் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
கோவை மாவட்டம் இடையர்பாளையம் மற்றும் பொன்னாக்கனி கிராமங்களில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு சுடுமண் ஊதுகுழல்கள், பெரிய அளவிலான இரும்பு கசடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்போதே அங்கு இரும்பு தொழிற்சாலைகள் இயங்கியது தெரியவந்ததுள்ளது.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி அருகே இருக்கின்றன இடையர்பாளையம் மற்றும் பொன்னாக்கனி கிராமங்கள். இங்கு வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் மேற்பரப்பு ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது அங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பழமையான நெடுங்கல், இரும்பு உருக்க பயன்படுத்தப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட ஊது குழல்கள், கொங்கு மண்ணுக்கே உரித்தான பல வண்ண வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு, கருப்பு நிற பானை ஓடுகள், குறியீடுகள், சங்கு வளையல்கள், கல் மணிகள், மான் கொம்புகள், சில்லுகள், பெரிய அளவிலான இரும்பு கசடுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
ஆய்வு மையத்தை சேர்ந்த தூரன் சு. வேலுச்சாமி, வே.நாக
ராசு கணேசகுமார், ரவிச்சந்திரன், பொன்னுசாமி, சதாசிவம், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கண்ட ஆய்வை நடத்தினர். இதுகுறித்து ஆய்வு மையத்தின் நாணயவியல் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பண்டைய தமிழ் சமூகத்தில் இடையர் என்று அழைக்கப்பட்ட முல்லை நில மக்கள் மலைக்கும் வயலுக்கும் இடைப்பட்ட நிலத்தில் கால்நடைகளை மேய்த்தனர். அவர்கள் பொன்னைவிட தங்களது கால்நடைகளை உயர்வாக கருதியதாக பாணாற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
அப்படியான கால்நடைகளை பிறர் கவர்ந்துச் செல்லும்போது அவர்கள் குழுப் போரில் தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். அப்படி இறந்துபோன வீரர்களுக்காக நெடுங்கற்கள் எழுப்பப்பட்டன. அப்படியான ஒரு நெடுங்கல்தான் இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டு அடி அகலமும், எட்டு அடி உயரமும் கொண்டுள்ளது. இப்போது இடையர்பாளையத்தில் இடையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவு வசிப்பது மேற்கண்ட ஆதாரங்களுக்கு வலு சேர்க்கிறது.
இடையர்பாளையத்துக்கு அருகிலுள்ளது பொன்னாக்கனி கிராமம். இங்கு இரும்பு கசடுகள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊதுகுழல்கள் பத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு பெருங்கற்படை பண்பாட்டின் ஓர் அங்கமான கல் வட்டமும், கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலோக கண்டுபிடிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தது இரும்பு. மனித குல நாகரிக வரலாற்றில் வேட்டை மற்றும் வேளாண்மையில் முக்கிய பங்கு வகித்தது இரும்பு.
பழந்தமிழர் இரும்பு தாதுக்களை உருக்கி இரும்பு தயாரித்தனர் என்று குறுந்தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இரும்பை உருக்காக மாற்ற 1,100 சென்டிகிரேட் வெப்பமும் எஃகாக மாற்ற 1,300 சென்டிகிரேட் வெப்பமும் தேவை. அந்த அளவுக்கு உலையில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய பழந்தமிழர்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊது குழல்கள் மூலம் காற்றை உலைக்குள் செலுத்தினர். அந்த ஊது குழல்கள், அதன் மூலம் செய்யப்பட்ட இரும்பு கசடுகளும்தான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஊது குழல்கள் 15 செ.மீட்டர் நீளமும் 6 செ.மீட்டர் விட்டமும் கொண்டவை. இவை சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, அந்த காலகட்டத்திலேயே இங்கு இரும்புத் தொழிற்சாலைகள் இருந்திருக்கின்றன என்பது தெரிய வருகிறது.
மேலும் இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஃபிளினி என்கிற வரலாற்று ஆய்வாளர் தனது ‘நேட்சுரல் ஹிஸ்டரி’ புத்தகத்தில் இரும்புப் பொருட்கள் சேர நாட்டிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக குறிப்பிடுகிறார். மேலும், அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மன்னன் புருஷோத்தமன் கொங்கு பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட எஃகுவை கொடையாக கொடுத்தான் என்கிறது வரலாறு. எனவே, எஃகும், வார்ப்பு இரும்பு பொருட்களும் பழந்தமிழர் காலத்திலேயே இங்கு உற்பத்தி செய்யப்பட்டன என்பதற்கு இப்போது கிடைத்துள்ள பொருட்கள் ஆதாரமாக அமைந்துள்ளன” என்றார்.
Friday, 19 December 2014
சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!-----இந்த செய்தியை அதிக அளவில் பகிர்ந்து விவசாயிகளுக்கு தெரிய படுத்துங்கள் நண்பர்களே!!!
சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.
தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622
email : aedce.tn@nic.in
http://www.aed.tn.gov.in/
http://www.aed.tn.gov.in/
Thursday, 18 December 2014
இந்திய மாநிலப் போக்குவரத்துப் பதிவு எண்கள்
| அருணாசலப் பிரதேசம் | AR |
| அஸ்ஸாம் | AS |
| ஆந்திரப் பிரதேசம் | AP |
| பீகார் | BR |
| கோவா | GA |
| குஜராத் | GJ |
| ஹரியானா | HR |
| இமாசலப் பிரதேசம் | HP |
| கர்நாடகம் | KA |
| கேரளம் | KL |
| மத்தியப் பிரதேசம் | MP |
| மகாராஷ்டிரம் | MH |
| மணிப்பூர் | MN |
| மேகாலயா | ML |
| மிசோரம் | MZ |
| நாகலாந் | NL |
| ஒரிசா | OR |
| பஞ்சாப் | PB |
| ராஜஸ்தான் | RJ |
| சிக்கிம் | SK |
| தமிழ்நாடு | TN |
| திரிபுரா | TR |
| உத்திர பிரதேசம் | UP |
| மேற்கு வங்காளம் | WB |
| அந்தமான்-நிகோபார் | AN |
| சண்டிகர் | CH |
| தாத்ரா நாகர்ஹவேலி | DN |
| டாமன் - டயூ | DD |
| தில்லி | DL |
| இலட்சத் தீவுகள் | LD |
| பாண்டிச்சேரி | PY |
Thursday, 11 December 2014
திருமூலர்
திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
திருமூலர் பெயரில் 12-க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. இவர் திருமூலர் அல்ல. திருமூல சித்தர்.வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை அவை. திருமூலர் திருமந்திரம் கலிவிருத்தம் என்னும் யாப்பினால் ஆன நூல். பிற்காலத்தில் கலிவிருத்த யாப்பில் தோன்றிய நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச் சேர்த்துவிட்டனர். இப்படி உருவான ஒரு புலவரின் பெயர்தான் திருமூல சித்தர்.
வரலாறு
திருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநேபாளம், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார். பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.
தில்லைத் திருநடங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்து, உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருவாவாடு துறையை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு, அத்திருப்பதியினை விட்டு நீங்காதொரு கருத்தும் தம் உள்ளத்தே தோன்ற அங்கே தங்கியிருந்தார். ஆவடுதுறையிறைவரை வழிபடுதலில் ஆராத பெருங்காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அகன்று செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் விடம் தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் சுழன்று வந்து மோப்பனவும் கதறுவனமாகி வருந்தின.
மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் 'இப்பசுக்கள் உற்ற துயரத்தினை நீக்குதல் வேண்டும்' என்றதோர் எண்ணம் திருவருளால் தோன்றியது. 'இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா' எனத் திருவுளத்தெண்ணிய தவமுனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாவலானதோரிடத்து மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப்பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அவ்விடையனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். எழுதலும் பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களைப்பினாலே வாலெடுத்து துள்ளிக்கொண்டு தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன. திருமூலநாயனார் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் முன்துறையிலேயிறங்கி நன்னீர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார்.
சூரியன் மேற்றிசையை அணுக மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைத்துத் தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைவனவாயின. அப்பசுக்கள் செல்லும் வழியிலே தொடர்ந்து பின்சென்ற சிவயோகியார். பசுக்கள் யாவும் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனியே நிற்பாராயினர்.
அந்நிலையில், மூலனுடைய மானமிகு மனையறக் கிழத்தியாகிய நங்கை, 'என் கணவர் பொழுது சென்ற பின்னரும் வரத் தாழ்ந்தனரே அவர்க்கு என்ன நேர்ந்ததோ' என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தையடைந்தாள். தன் கணவது உடம்பிற் தோன்றிய உள்ளுணர்வு மாற்றத்தைக் கண்டு 'இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்' என்று எண்ணி அவரைத் தளர்வின்றி இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடுவதற்கு நெருங்கினாள். திருமூலராகிய சிவயோகியார், அவள் தம்மைத் தீண்டவொண்ணாதவாறு தடுத்து நிறுத்தினார். தன் கணவனையன்றி மக்கள் முதலிய நெருங்கிய சுற்றத்தார் ஒருவருமின்றித் தனியாளாகிய அவள், அவரது தொடர்பற்ற நிலைகண்டு அஞ்சி மனங் கலங்கினாள். 'உமது அன்புடைய மனைவியாகிய எளியோனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்கு எத்தகைய பெருந் துன்பத்தைச் செய்து விட்டீர்' என்று கூறிப்புலம்பி வாட்டமுற்றாள். அந்நிலையில் நிறைதவச்செல்வராகிய திருமூலர், அவளை நோக்கி 'நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவேதும் இல்லை' எனக் கூறிவிட்டு, அவ்வூரில் அருந்தவர் பலரும் தங்கியிருந்தற்கென அமைந்துள்ள பொதுமடத்திற் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்திருந்தார்.
தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ட மூலன் மனைவி, அது பற்றி யாரிடத்தும் சொல்லாமலும், தவ நிலையினராகிய அவர் பால் அணையாமலும் அன்றிரவு முழுவதும் உறங்காதவராய்த் துயருற்றாள். பொழுது விடிந்ததும் தன் கணவர் நிலையை அவ்வூரிலுள்ள நல்லோரிடம் எடுத்துரைத்தாள். அதுகேட்ட சான்றோர், திருமூலரை அணுகி அவரது நிலைமையை நாடி, 'இது பித்தினால் விளைந்த மயக்கமன்று' பேய் பிடித்தல் முதலாகப் பிறிதொரு சார்பால் உளதாகியதும் அன்று; சித்த விகாரக் கலக்கங்களையெல்லாம் அறவே களைந்து தெளிவு பெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்து உடையவராய் இவர் அமைந்துள்ளார். இந்நிலைமை யாவராலும் அளந்தற்கரியதாம்' எனத் தெளிந்தனர். "இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஒருங்கே அறியவல்ல முற்றுணர்வுடையவராக விளங்குகின்றார். ஆகவே முன்னை நிலைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய வாழ்வில் ஈடுபடுவார் அல்லர்' என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்ட அவள், 'அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளைத் தேற்றி அவளது மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
சாத்தனூரில் பொதுமடத்தில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர், யோகம் கலைந்து எழுந்து முதல் நாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தம் உடம்பினைச் சேமமாக வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார். அங்கு அதனைக் காணாதவராகி, அதுமறைந்த செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார். பிறைமுடிக்கண்ணிப் பெருமானாகிய இறைவன், உயிர்களிடம் வைத்த பெருங்கருணையாலே அருளிய சிவாகமங்களின் அரும் பொருள்களை இந்நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்றிறத்தால் சிவயோகியாரது முந்தைய உடம்பினை மறைப்பித்தருளினார். இம்மெய்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளியவுணர்ந்தார். அந்நிலையில் தம்மைப் பின் தொடர்ந்து வந்த ஆயர்குலத்தவர்கட்கும் தமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்பதை அவர்கட்கு விளங்க அறிவுறுத்தருளினார்; அவர்கள் எல்லாரும் தம்மைவிட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விட்டத்தை விட்டகன்று திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார். அத்திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் அம்மையப்பராகிய இறைவரை வணங்கி அத்திருக்கோயிலின் மேற்கில் மதிற்புறத்தேயுள்ள அரச மரத்தின்கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்து அமர்ந்து, உள்ளக் கமலத்தில் வீற்றிருந்தருளும் அரும்பொருளாகிய சிவபுரம் பொருளோடு இரண்டறக்கூடி ஒன்றியிருந்தார்.
இங்கனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலநாயனார் ஊனோடு தொடர்ந்த இப்பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து விளங்கும் நல்ல திருமந்திரமாலையாகிய நூலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்
- ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
- நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
- வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
- சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே
என்னும் திருப்பாடலைத் தொடங்கி ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்கள் அருளிச் செய்தார்.எல்லாம் வல்ல பரம்பொருள் அன்பே உருவானவர் என்பதை தம் பாடல் மூலம் விளக்குகிறார்.அப்பாடல் பின் வருமாறு
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரேஅன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
இவ்வாராக தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரத் திருமுறையினை நிறைவுசெய்து சிவபெருமான் திருவருளாலே திருக்கயிலை அடைந்து அம்முதல்வனுடைய திருவடி நீழலில் என்றும் பிரியா துறையும் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்று இனிதிருந்தார்.
- ”குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு
- முடிமன்னு கூனற் பிறையாளஃன் றன்னை முழுத்தமிழின்
- படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி
- அடிமன்ன வைத்த பிரான்மூல நாகின்ற அங்கணனே”
என்று திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார்.
திருமூல நாயனார் குருபூசை: ஐப்பசி அசுவதி
திருமூலர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.
நூல்கள்
- திருமூலர் காவியம் 8000
- சிற்பநூல் 1000
- சோதிடம் 300
- மாந்திரீகம் 600
- வைத்தியச் சுருக்கம் 200
- சூக்கும ஞானம் 100
- சல்லியம் 1000
- பெருங்காவியம் 1500
- யோக ஞானம் 16
- காவியம் 1000
- தீட்சை விதி 100
- ஆறாதாரம் 64
- கருங்கிடை 600
- கோர்வை விதி 16
- பச்சை நூல் 24
- விதி நூல் 24
- தீட்சை விதி 18
- திருமந்திரம் 3000
சித்தர்கள்
தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர் அவர்கள் வருமாறு
- திருமூலர்
- இராமதேவ சித்தர்
- கும்பமுனி
- இடைக்காடர்
- தன்வந்திரி
- வால்மீகி
- கமலமுனி
- போகர்
- மச்சமுனி
- கொங்கணர்
- பதஞ்சலி
- நந்தி தேவர்
- போதகுரு
- பாம்பாட்டி சித்தர்
- சட்டைமுனி
- சுந்தரானந்தர்
- குதம்பைச்சித்தர்
- கோரக்கர்
சித்தர்
சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
திருமூலர்--திருமந்திரம்-668வது பாடல்
இத்தகைய எண் பெருஞ் சித்திகளைச் எட்டு வகையான யோகாங்க பயிற்சியினால் சித்தர்கள் பெற்றனர்.
எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்
- இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
- நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
- ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
- பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
- பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
- தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
- தியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
- சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.
எண் பெருஞ் சித்திகள் அல்லது அட்டமா சித்திகள்
|
எண் பெருஞ் சித்திகளை விளக்கம்
- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
- மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
- கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
- பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
- பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
- ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.
இத்தகைய எண் பெருஞ் சித்திகளைச் எட்டு வகையான யோகாங்க பயிற்சியினால் சித்தர்கள் பெற்றனர்.
தமிழ் வளர்த்த சித்தர்கள்
சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை படைத்துள்ளனர். தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், கைரேகை சாத்திரம், வான சாத்திரம், புவியியல் நூல், தாவரயியல் நூல், சோதிட நூல், கணித நூல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன
Wednesday, 3 December 2014
பச்சைத் தமிழர் காமராஜர்
பெரியார் அவர்களால் பச்சைத் தமிழர் என்று பாராட்டப்பட்டவர் காமராஜர். பெரியார் பாராட்டியது போலவே காமராஜர் ஆரம்ப முதல் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லாலும், செயலாலும் உண்மையான ஒரு தமிழராகவே வாழ்ந்தார்.
தமிழனின் உடையாகிய வேட்டி, துண்டு, சட்டை ஆகியவற்றையே அணிந்தார் . உள்ளூரிலும், டில்லி மற்றும் வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அவர் இந்த எளிய உடையைத் தான் அணிந்தார்.
தனது வாழ்நாளில் அவர் தமிழர் உடையைத் தவிர வேறு உடையை அணிந்ததே இல்லை. ரஷ்ய நாடு மற்றும் பல மேலை நாடுகளுக்குப் பயணம் சென்ற போது கூட அவர் உடை இதுதான்.
அனைத்திந்திய காங்கிரஸ் தலைவர்களாக வந்த தமிழர்கள் காங்கிரஸ் மாநாடுகளில் தங்கள் தலைமை உரையை ஆங்கிலத்திலோ இந்தியிலோ பேசினார்கள். ஆனால் அனைத்திந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழிலே தனது தலைமையுரையை நிகழ்த்திய ஒரே தலைவர் காமராஜர் தான்.
1964-ஆம் ஆண்டு புவனேஸ்வரம் காங்கிரஸ் மாநாட்டில் காமராஜர் தமிழில் நிகழ்த்திய தலைமை உரையைக் கேட்டு நேரு உட்பட அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களும் கைதட்டி மனமாரப் பாராட்டினார்கள்.
இவ்வாறு தமிழுக்கு வடநாட்டவர் மத்தியில் நிலையான ஒரு புகழைப் பெற்றுத் தந்தவர் காமராஜர் தான்.
காமராஜர் பச்சைத் தமிழர் என்பதற்கு இன்னொரு உதாரணமும் உண்டு. மற்ற தலைவர்கள் நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து பதவியேற்பார்கள்.
ஆனால் காமராஜர் முதன் முதலில் தமிழக முதல்வர் பதவி ஏற்க தமிழ்ப் புத்தாண்டு தினத்தைத்தான் தேர்ந்தெடுத்தார்.
அவர் பதவி ஏற்ற நாள் 1954 ஏப்ரல் மாதம் 13 ஆகும். இவ்வாறு தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் புகழைத் தந்த காமராஜரை மிகவும் பொருத்தமாக பச்சைத் தமிழர் என்று பெரியார் அழைத்தார்.
1954-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள். தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி காமராஜர் தமிழ் நாட்டின் முதல் மந்திரியாகப் பதவியேற்றார்.
நாள் முழுவதும் உழைக்கிறவர்களை கூலிக்காரர்கள், வேலைக்காரர்கள் என்பதாகக் குறைவாகப் பேசுகிறோம். உழைப்பே சிறிதும் இல்லாமல், பிறருடைய உழைப்பினால் வாழ்க்கை நடத்தி வருகிற சோம்பேறிகளை மகாராஜர் அல்லது எஜமான் என்று சொல்கிறோம்.
ஏழை எளிய மக்களின் துயரம் நீங்கவும், அவர்கள் நல்வாழ்வு வாழவும் வேண்டியே நான் முதன்மந்திரியாகப் பதவி ஏற்கிறேன். எனக்கு இந்தப் பதவி அவசியமில்லை. தேசமக்களின் வாழ்வே பெரிது.''
- காமராஜர் முதன் மந்திரியானதும் கூறிய முதல் வார்த்தைகள் மேலே இருப்பவை.
Wednesday, 29 October 2014
அரசனின் தோற்றம்
உலகின் இயற்கை அமைப்பை ஒட்டி நிலங்களைப் பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பாகுபாடு செய்தனர். மழை தவழும் மலைச் சாரலிலே பல்வேறு பூக்கள் மலர்ந்த போதும், அவற்றுள் தேன் நிறைந்த பூவான குறிஞ்சிப்பூவே சிறப்புப் பெற்றிருந்தது. அதனால் மலையும், மலைசார்ந்த இடமும் "குறிஞ்சி' எனச் சுட்டப்பட்டது.
முல்லைக்குரிய பெரும்பொழுதையும், சிறுபொழுதையும் வரையறுக்கும் தொல்காப்பியர், "காரும், மலையும் முல்லை' எனச் சுட்டுகிறார். ""கார் காலமாவது, மழைபொழியும் காலம். அது ஆவணித் திங்களும், புரட்டாசித் திங்களும். மாலையாவது இராப்பொழுதின் முற்கூறு'' என்பது இளம்பூரணம். முல்லைக்குரிய உரிப்பொருளான "இருத்தலை' பற்றி, நச்சினார்க்கினியர்,
""இனித் தலைவி பிரிவுணத்திய வழிப்பிரியார் என்றிருத்தல், பிறிந்துழிக்குறித்த பருவம் அன்றென்று தானே கூறுதல். பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவன ஆகியவை இருத்தல்'' என்று விளக்குவார்.
பொதுவாக, கருப்பொருள்களாகக் கருதப்படுபவை இவை என்று தொல்காப்பியர் விளக்குகிறாரேயன்றி ஐந்திணைகளுக்கும் உரியவை இவை என்று அவர் வகுக்கவில்லை. உரையாசிரியர்களே அங்ஙனம் வகுத்துள்ளனர். மேலும், தொல்காப்பியர்,
""ஆயர்வேட்டுவர் ஆடுஉத்திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும்உளரே''
என்று முல்லைத் திணைக்குரிய மக்களை மட்டும் விளக்குகிறார்.
முல்லைத் திணைக்குரிய முதற்பொருள்:
பெரும்பொழுது - கார்காலம்.
சிறுபொழுது - மாலை.
கருப்பொருள்: திருமால் (நெடுமால்) முல்லைத்திணைக் கடவுள்.
உரிப்பொருள்: நிலத்தலைவர்கள்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் ஆகியோர்.
பறவை: கானக்கோழி, சிவல், விலங்கு: மான், முயல், ஊர்: பாடி, சேரி, பள்ளி என்று அழைக்கப்பட்டன. பூக்கள்: முல்லை, குல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ.
மரங்கள்: கொன்றை, காயா, குருந்தம் முதலியன.
உணவு: வரகு, சாமை, முதிரை பறை: ஏறு கோட்பறை.
யாழ்: முல்லையாழ். நீர்நிலை: கான்யாறு.
தொழில்: நிரைமேய்த்தல், பயிர் விதைத்தல், களை கட்டல், அறுத்தல் முதலியன.
மனித வரலாற்றின் ஆரம்ப கட்டங்களில் மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்த மனிதர்கள், மக்கள் தொகைக் பெருக்கத்தின் காரணமாக அடுத்துள்ள கானகப் பகுதியான முல்லை நிலத்திற்குச் சென்றனர். மனிதன், இதற்குள் நாய், எருமை, பசு, ஆடு போன்ற விலங்குகளைப் பழக்கி, வளர்க்கக் கற்றுக்கொண்டான்.
மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியின் இரண்டாவது நிலையான "ஆயர்நிலை' இவ்வாறு எய்தப்பட்டது. முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் விரைந்து பெருகும். அதனால் முதன் முதலாகத் தனிநபர் சொத்துரிமை இங்குதான் ஏற்பட்டது. இனக்குழுக்கள் தனித்தனிக் குடும்பமுறை ஆகியவை உருவாயின. சமுதாயத்தின் இரண்டாவது வளர்ச்சி நிலை இது.
காதல் மணம், மணச்சடங்குகள் இன்மை (புலிப்பல் தாலி, தாழையுடை தவிர) ஆகிய தன்மைகளைக் கொண்டதும், "களவு' என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பதுமான இயற்கை மணமுறை முல்லை நிலத்தில் சிறிது சிறிதாக மாறி, "கற்பு' மணம் ஏற்பட்டது.
தனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தைவழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. காரணம், ஏராளமான ஆடு, மாடுகளைத் தன் சொத்தாக உடைய தலைவன் தன் செல்வம் காரணமாக அதிகாரமும், ஆதிக்கமும் பெற்றான். கூட்டுக்குடும்பமுறை உருவானது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்' ஆனான். தமிழகத்தில் இவ்வாறு அரசன் உருவானான் என்பதைக் காட்டும் சொல், "கோன்' (கோன்-இடையன், அரசன்; இடைச்சி-ஆய்ச்சி, அரசி). ஆடு, மாடு மேய்க்க உதவும் "கோலே' பின்னாளில் அரசனின் "செங்கோல்' ஆயிற்று. ஆயின் முல்லை நிலத்தில் குறுநில அரசுகளே உருவாயின என்றும், மருத நிலத்தில் தான் பேரரசு உருவாகியதென்றும் கருதலாம்.
ஆநிரையைச் செல்வமெனப் போற்றும் முல்லை நிலச் சிற்றரசுகளிடையே ஏற்பட்ட சிறுசிறு போர்களே (ஆநிரை கவர்தல்) தொடக்ககாலப் போர்களாக இருந்தன. எனவே, பண்டைத் தமிழகத்தின் முதற்போர் முறையாக, ஆநிரை கவர்தல் அமைந்தது. கிராமிய வாழ்வை - கற்பனையான பொற்கால வாழ்வைச் சித்திரிக்கும் பாடல்களே முல்லைப் பாடல்கள் என்பர் மேலை நாட்டு மொழி இயல் வல்லுநர்கள். தமிழகத்தில் உள்ள முல்லைத் திணைப் பாடல்களைப் போன்றே கிரேக்கம், லத்தீன், எபிரேயம், வடமொழி மற்றும் இந்திய மொழிகளிலும் முல்லைப் பாடல்கள் உள்ளன.
இந்திய நாகரிகத்தின் இரண்டாம் நிலையாக முல்லை நில வாழ்க்கை அமைந்துள்ளது. தமிழகத்தில் அரசன் உருவானது முல்லை நிலத்தில்தான். லத்தீன், தமிழ் ஆகிய செவ்வியல் மொழிகளில் இருப்பது போல் வடநாட்டில் ஏனோ, எந்த மொழியிலும் முல்லைப் பாடல்கள் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடைச்சங்க இலக்கியங்களாக எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமே கருதப்படும். எட்டுத்தொகை நூல்களில் அக இலக்கியங்களான நற்றிணையில் 30 பாடல்கள், குறுந்தொகையில் 45, ஐங்குறுநூற்றில் 100, கலித்தொகையில் 40, அகநானூற்றில் 40 பாடல்கள் முல்லைப் பாடல்களாகும். பத்துப்பாட்டில் நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகிய இரண்டு பாடல்களும் முல்லைத் திணைப் பாடல்கள். முல்லை நிலப் பாடல்கள் மொத்தம் 234. மிகக்குறுகிய 3 அடிச் சிற்றெல்லையில் ஐங்குறுநூற்றுப் பாடலையும், மிக அதிகமாக 188 அடிகளைக் கொண்ட நெடுநல்வாடைப் பாடலையும் காண்கிறோம்.
எட்டுத்தொகை நூல்களில் ஐங்குறுநூறு(100), முல்லைப் பாடல்கள் பாடிய பேயனாரை அடுத்து இடைக்காடரும், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனாரும் மிக அதிகமாக முல்லைப் பாடல்கள் பாடியுள்ளார்கள். முல்லைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 73. பாடிய புலவர்கள் பெயர்கள் தெரியாத பாடல்கள் எண்ணிக்கை 6.
உலகச் செம்மொழிகளான கிரேக்கம், லத்தீன், எபிரேயம் ஆகிய மொழிகளிலுள்ள முல்லைப் பாடல்களின் எண்ணிக்கையைவிட, தமிழ் மொழியில் உள்ள முல்லைப் பாடல்களின் எண்ணிக்கை அதிகம்.
முல்லைப் பாடல்கள் வழி நாம் அறியும் சில சங்கச் செய்திகளாவன: விரிச்சி கேட்டு நிற்கும்பொழுது நற்சொல் கேட்பின், நன்மை நடக்கும் என்றும், நல்லது அல்லாத சொல் கேட்பின், நன்மை நடவாது என்றும் நம்பினர் அக்கால மக்கள். இன்றும் கிராம மக்களிடையே இந்தப் பழக்கம் தொடர்கிறது; யானைகளோடு பேசப் பாகர்கள் வடமொழியைப் பயன்படுத்தினர்; போர்க்களங்களில் மங்கையர் பணி புரிந்தனர்; ஏழடுக்கு மாளிகைகளில் மக்கள் வசித்தனர்; நாழிகைக் கணக்கர், "நாழிகை வட்டில்' கொண்டு காலத்தைக் கணித்தனர்; அரசுச் செய்திகளைப் பிறர் அறியாதிருக்க ஊமையர்களை (மிலேச்சர்) அரசர்கள் தங்களுக்குக் காவலாக வைத்திருந்தனர்; இதுபோன்ற சங்கச் செய்திகள் பலவற்றை முல்லைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.
வேலூர் பெயர் காரணம் தெரியுமா?
நல்லியக்கோடன் என்னும் மன்னன் முருக பக்தனாக இருந்தான். அறவழியில் ஆட்சி செய்த அம்மன்னன் மீது பொறாமை கொண்ட பகை மன்னர்கள் படையெடுத்து வருவதாக செய்தி வந்தது. மனவருத்தத்தோடு, முருகனுக்குரிய இரவு நேர பூஜையை முடித்து விட்டு படுக்கைக்குச் சென்றான். கனவில் தோன்றிய முருகன், நல்லியக்கோடா! யாமிருக்க பயமேன்! கேணியில் பூத்திருக்கும் தாமரை மலரே உனக்கு ஆயுதம்! வெற்றி உன் பக்கமே! என்று வாழ்த்தி மறைந்தார்.கண் விழித்தான் மன்னன். மீண்டும் அவன் கண்களுக்கு துõக்கம் வரவில்லை. பொழுது புலர்ந்ததும், தாமரைகள் பூத்திருக்கும் கேணிக்குச் சென்றான். அங்கிருந்த மலரைப் பறித்து பகைவர் மீது வீசியெறிந்தான். அது வேலாக மாறி பகைவர்கள் வந்த திசை நோக்கிப் புறப்பட்டது. செய்வதறியாமல் திகைத்த அவர்கள் புறமுதுகிட்டு ஓடினர். வேல் எறிந்து வென்ற ஊர் என்பதால், நல்லியக்கோடன் ஆட்சி செய்த ஊருக்கு வேலூர் என்ற பெயர் வந்தது. திறல்வேல் நுதியில் பூத்தகேணி விறல்வேல் வென்றி வேலூர் என்று இவ்வூர் பற்றி, சிறுபாணாற்றுப்படை என்னும் தமிழ் இலக்கியம் கூறுகிறது. இந்த மன்னன் தான் பெற்ற வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் பொன்னால் ஆன பதக்கம், ஆபரணங்களை முருகப்பெருமானுக்குச் சூட்டி மகிழ்ந்தான்.
Thursday, 9 October 2014
தமிழ் மொழியின் சிறப்புகளில் சில
"பாளையகரர்கள் நுழை வாயில்"
என்று தமிழில்எழுதபட்டிருக்கும்.
* கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்ற
என்பது பொறிக்கபட்டிருகும்.
* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்..
* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டிருக்கும்.
* 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில்
இந்தியாவிற்கு சுதந்திரம்
கொடுக்கலாமா என்ற
விவாதத்தின் பொது ஆங்கிலேய
தளபதி இந்தியாவின்
மிகபெரியசொத்தான
திருக்குறளை நாம்
எடுத்து வந்தாகி விட்டது...இனிமேல்
அது வெறும்
மண்தான்..ஆகவே அது நமக்கு தேவை இல்லைஎன்று கூறினாராம்..
* உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாகஅதி
கமாகமொழி பெயர்க்கப்பட்ட நூல்
திருக்குறள்..
Monday, 21 July 2014
நடிகர் சிவாஜி நினைவுகள்
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிறப்பு:
சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.
ஆரம்பகால வாழ்க்கை
சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.
திரையுலக வாழ்க்கை:
திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.
தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.
அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.
அரசியல் வாழ்க்கை
அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார்.
விருதுகள்:
1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
1966 – பத்ம ஸ்ரீ விருது
1984 – பத்ம பூஷன் விருது
1995 – செவாலியே விருது (Chevalier)
1997 – தாதா சாகேப் பால்கே விருது
1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.
இறப்பு
தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.
Subscribe to:
Comments (Atom)


